சேர்வலாறு அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது

நெல்லையில் விடிய, விடிய மழை பெய்தது. இதனால் சேர்வலாறு அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது.

Update: 2022-11-17 20:26 GMT

நெல்லையில் விடிய, விடிய மழை பெய்தது. இதனால் சேர்வலாறு அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது.

பலத்த மழை

வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது.

நெல்லையில் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் திடீரென்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை விடிய, விடிய கொட்டித்தீர்த்தது. மாவட்டத்தின் புறநகர் பகுதியிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நெல்லை சந்திப்பு, டவுன், தச்சநல்லூர், மேலப்பாளையம், பாளையங்கோட்டையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் இரவு நேரத்தில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வந்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் 89.20 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 2.40 அடி உயர்ந்து 91.60 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 1,658 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று நீர்வரத்து 2,850 கன அடியாக அதிகரித்து உள்ளது. பாசனத்துக்காக 705 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதுதவிர காட்டாற்று ஓடைகள், ஊர்க்காட்டு தண்ணீர் ஆகியவை சேர்ந்து தாமிரபரணி ஆற்றில் கலந்து செல்கிறது. இதனால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் வழக்கத்தைவிட நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

100 அடியை தாண்டியது

சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 99.08 அடியாக இருந்தது. நேற்று இந்த அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. அதாவது மேலும் 6.56 அடி உயர்ந்து, 105.64 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 77.90 அடியாக இருக்கிறது. இந்த அணைக்கு நீர்வரத்து 618 கன அடியாகவும், வெளியேற்றம் 35 கன அடியாகவும் உள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 48.25 அடியாக இருக்கிறது.

தென்காசி அணைகள்

இதேேபால் தென்காசி மாவட்டத்தில் 36 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி விட்டது. இந்த அணைக்கு வரும் 32 கன அடி தண்ணீர் அப்படியே மறுகால் பாய்ந்து ஓடுகிறது.

85 அடி உயரம் கொண்ட கடனாநதி அணை நீர்மட்டம் மேலும் 4.30 அடி உயர்ந்து 77.80 அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 556 கன அடியாகவும், பாசனத்துக்கு 66 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. 84 அடி உயரம் கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் மேலும் 3.50 அடி உயர்ந்து 76 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 168 கன அடியாகவும், வெளியேற்றம் 40 கன அடியாகவும் இருக்கிறது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 57.09 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 82.50 அடியாகவும் உள்ளது.

மழை அளவு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

அம்பை -42, சேரன்மாதேவி -41, மணிமுத்தாறு -18, நாங்குநேரி -6, பாளையங்கோட்டை -25, பாபநாசம் -21, ராதாபுரம் -4, நெல்லை -43, சேர்வலாறு அணை -20, கன்னடியன் கால்வாய் -67, களக்காடு -5, கொடுமுடியாறு அணை -25, மூைலக்கரைப்பட்டி -15, மாஞ்சோலை -21, காக்காச்சி -8, நாலுமுக்கு -16, ஊத்து -14.

கடனாநதி-37, ராமநதி -85, கருப்பாநதி -37, குண்டாறு -19, அடவிநயினார் -7, ஆய்க்குடி -8, செங்கோட்டை -28, தென்காசி -9, சங்கரன்கோவில் -4, சிவகிரி -14.

Tags:    

மேலும் செய்திகள்