சென்னையின் மிகப்பெரிய பூங்காவை கோயம்பேட்டில் அமைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னையின் மிகப்பெரிய பூங்காவை கோயம்பேட்டில் அமைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2024-01-29 13:01 GMT

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள 36 ஏக்கர் நிலம் அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படவிருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறோம் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலம் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

சென்னை மாநகரின் முதன்மை அடையாளமாக திகழ்ந்து வரும் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் சென்னை மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த ஒன்றாகிவிட்டது. பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியை அவசரம், அவசரமாக கிளாம்பாக்கத்திற்கு மாற்றிய தமிழக அரசு, இன்னொரு பகுதியை இந்த ஆண்டு இறுதிக்குள் கூத்தம்பாக்கத்திற்கு மாற்றும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்குக் காரணம் ஆட்சி முடிவதற்கு முன்பாகவே கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள இடத்தை அபுதாபியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற அவசரம் தான் என்று கூறப்படுகிறது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையை திருமழிசைக்கு மாற்றி விட்டு, அந்த இடத்தில் தனியார் வணிக வளாகம் அமைக்க அரசு திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அதைக் கண்டித்து, கடந்த ஆகஸ்ட் 17-ம் நாள் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அப்போது அதை தமிழக அரசு மறுத்தது. ஆனால், இப்போது கோயம்பேடு பேருந்து நிலையம் முழுமையாக இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன்பாகவே, அந்த இடத்தில் மிகப்பெரிய திட்டத்தை செயல்படுத்தப்போவதாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருக்கிறார். இதை வைத்துப் பார்க்கும் போது கோயம்பேடு பேருந்து நிலையம் அபுதாபி நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படுவது உறுதியாகிறது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தின் மொத்தப்பரப்பு 36 ஏக்கர், தனியார் பேருந்து நிலையம் 6.8 ஏக்கர், கோயம்பேடு சந்தைப் பூங்கா 7.6 ஏக்கர், கூடுதலாக உள்ள நிலம் 16 ஏக்கர் ஆகியவற்றைச் சேர்த்தால் மொத்தம் 66.4 ஏக்கர் நிலம் கிடைக்கும். அதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ.13.200 கோடி ஆகும். இது அபுதாபி நிறுவனம் தமிழகத்தில் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள ரூ.3500 கோடி முதலீட்டை விட 4 மடங்கு அதிகம் ஆகும். இவ்வளவு அதிக மதிப்புள்ள மக்களுக்கு சொந்தமான நிலத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை அனுமதிக்க முடியாது. மாறாக அந்த நிலத்தை பூங்காவாக மாற்றுவதே சரியாகும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தை பூங்காவாக மாற்றுவதற்கு ஏராளமான நியாயங்கள் உள்ளன. இந்தியாவின் அனைத்து பெரு நகரங்களிலும் மக்கள் பயன்படுத்துவதற்கான பூங்காக்கள் பெருமளவில் உள்ளன. தில்லியின் மெஹ்ராலி பூங்கா 200 ஏக்கரிலும் லோதி பூங்கா 90 ஏக்கரிலும் அமைந்துள்ளன. இவை தவிர புதுதில்லியின் பதர்பூர் பகுதியில் 880 ஏக்கர் பரப்பளவில் புதிய பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இது திறக்கப்படும் போது ஆசியாவின் மிகப்பெரிய பூங்காவாக இருக்கும். பெங்களூரில் லால்பாக் பூங்கா 240 ஏக்கரிலும், கப்பன் பூங்கா 100 ஏக்கரிலும் அமைக்கப்பட்டுள்ளன. பன்னாட்டு அளவில் நியூயார்க் சென்ட்ரல் பூங்கா 843 ஏக்கரிலும், லண்டன் ஹைட் பூங்கா 350 ஏக்கரிலும் அமைந்துள்ளன.

ஆனால் சென்னையில் அத்தகைய பூங்காக்கள் இல்லை. சென்னையின் பெரிய பூங்காவான செம்மொழி பூங்கா வெறும் 20 ஏக்கரிலும், அண்ணாநகர் கோபுர பூங்கா 15 ஏக்கரிலும் மட்டுமே அமைந்துள்ளன. அடையாறு தொல்காப்பியப் பூங்கா 358 ஏக்கரில் இருந்தாலும் அது மக்களின் அன்றாட பயன்பாட்டுக்கானது அல்ல. பனகல் பூங்கா. நேரு பூங்கா. திரு.வி.க. பூங்கா, மே தின பூங்கா போன்ற பல பூங்காக்கள் மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. அதனால், சென்னையின் பசுமைப்போர்வை பரப்பு பெருமளவில் குறைந்து விட்ட நிலையில் அதை ஈடுகட்ட புதிய பூங்காக்களை உருவாக்குவது மிகவும் அவசியமாகும். அதற்கு கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் மிகச்சிறந்த தேர்வாகும்.

பூங்காக்கள் எனப்படுபவை அழகுக்கான இடங்கள் மட்டுமல்ல. அவை தான் உடல் ஆரோக்கியத்தை காப்பதற்கான உடற்பயிற்சி செய்யும் இடங்களாகவும், மனிதர்கள் உயிர்வாழத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்து வழங்கும் ஆலைகளாகவும் திகழ்கின்றன. சென்னை போன்ற பெருநகரங்களில் செயல்படும் தொழிற்சாலைகளில் இருந்தும், போக்குவரத்துக்கான வாகனங்களில் இருந்தும் வெளியேற்றப்படும் நச்சு வாயுக்களை உள்ளிழுத்து, ஆக்சிஜன் வாயுவை வழங்க சென்னையில் அதிக எண்ணிக்கையில் பூங்காக்கள் உருவாக்கப்பட வேண்டியது கட்டாயம் என்பதை தமிழக ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

சென்னை மாநகரில் தொற்றா நோய்கள் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள், அதீத உடல்பருமன் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகமாகிவருகின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதற்கும் மக்களின் உடலுழைப்பு வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் பூங்காக்கள் தேவை. எனவே, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், தனியார் பேருந்து நிலையம், சந்தைப் பூங்கா, கூடுதல் நிலம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து 66 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் மிகப்பெரிய பூங்காவை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்