சென்னை- தஞ்சை உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் மயிலாடுதுறையில் 5 நிமிடங்கள் நிற்க அனுமதி- பயணிகள் வலியுறுத்தல்

சென்னை- தஞ்சை உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் மயிலாடுதுறையில் 5 நிமிடங்கள் நிற்க அனுமதி வழங்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-07-19 19:00 GMT

சென்னை- தஞ்சை உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் மயிலாடுதுறையில் 5 நிமிடங்கள் நிற்க அனுமதி வழங்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில்

தஞ்சையில் இருந்து சென்னைக்கு உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்:16866) பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் தஞ்சையில் இருந்து தினசரி இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.25 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். மறுமார்க்கமாக (எண்:16865) சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு தஞ்சைக்கு காலை 6 மணிக்கு வருவது வழக்கம்.

இதில் சென்னையில் இருந்து தஞ்சை வரும் உழவன் ரெயிலை மயிலாடுதுறையில் 5 நிமிடங்கள் நிறுத்தம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என ரெயில்வே துறைக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கை மனு

இதுகுறித்து மயிலாடுதுறை ரெயில் பயணிகள் சங்கம் சார்பில் அதன் செயற்குழு உறுப்பினர் சுந்தர், திருச்சி ரெயில்வே கோட்ட வணிக மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இன்று (வியாழக்கிழமை) முதல் உழவன் எக்ஸ்பிரஸ் (எண்:16866) முக்கிய ரெயில்வே சந்திப்பான மயிலாடுதுறையில் பார்சல் ஏற்றுவதற்காக 5 நிமிடங்கள் நிறுத்தி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மயிலாடுதுறை ரெயில் பயணிகள் சங்கம் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

5 நிமிடங்கள்

அதேபோல் மறுமார்க்கமாக சென்னையில் இருந்து தஞ்சை வரும் உழவன் ரெயிலையும் (எண்:16865) மயிலாடுதுறையில் 5 நிமிடங்கள் நிறுத்தம் செய்ய அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு நிறுத்தினால் மட்டுமே சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு பார்சல் புக்கிங் செய்ய இயலும்.

ஏனென்றால் சென்னையில் பார்சல் புக்கிங் செய்ய செல்லும்போது ஒரு சில அதிகாரிகள் மயிலாடுதுறைக்கு பார்சல் புக்கிங் கிடையாது என்று கூறி விடுகின்றனர். ஒரு சில அதிகாரிகள் 2 நிமிடங்கள் மட்டுமே ரெயில் நிற்கும். பார்சல் இறக்குவதற்கு நேரம் கிடையாது என்று பதில் தருகிறார்கள்.

கூடுதலாக...

எனவே கூடுதலாக 3 நிமிடங்கள் நிற்க அனுமதி கொடுத்தால் மயிலாடுதுறையில் பார்சல் இறக்கி கொள்வதற்கு வசதியாக இருக்கும். இதனால் அதிக அளவு பார்சல் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்