19 நாட்களாக நடைபெற்ற சென்னை புத்தகக் கண்காட்சி: ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

47வது சென்னை புத்தகக் கண்காட்சிக்கு 15 லட்சம் பேர் வருகை தந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2024-01-21 23:03 IST

கோப்புப்படம்

சென்னை,

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 3-ந் தேதி தொடங்கிய 47-வது சென்னை புத்தகக் கண்காட்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 900 அரங்குகளுடன் நடைபெற்ற இந்த புத்தக கண்காட்சியானது இன்றுடன் நிறைவடைந்தது.

தினம் தோறும் வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் என 19 நாட்களாக இந்த புத்தகக் கண்காட்சியில் ஆன்மிக புத்தகங்கள், அறிவியல் சார் புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையில் லட்சக்கணக்கான புத்தகங்கள் சுமார் ரூ.18 கோடி மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

புத்தகக் கண்காட்சியின் நிறைவு நாள் நிகச்சியில் புத்தகக் கண்காட்சி நடைபெறுவதற்கு உறுதுனையாக இருந்து உதவி புரிந்த நன்கொடையாளர்கள், நிறுவனங்களை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மகாதேவன் பாராட்டி கவுரவித்தார். மேலும் பதிப்புத் துறையில் நூற்றாண்டு, பொன்விழா, வெள்ளிவிழா கண்ட பதிப்பாளர்களையும் பாராட்டி சிறப்பு செய்து விழா நிறைவுப் பேருரை ஆற்றினார்.

Tags:    

மேலும் செய்திகள்