செங்கல்பட்டில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றவருக்கு அடி-உதை
செங்கல்பட்டில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபரை வங்கி அதிகாரிகள் கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே செங்கல்பட்டு-காஞ்சீபுரம் சாலையில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏ.டி.எம். மையம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கடந்த ஒரு மாத காலமாக சுற்றி திரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபர் திடீரென ஏ.டி.எம்.மில் புகுந்து எந்திரத்தை உடைக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகளை கண்காணிப்பு கேமராவில் பார்த்த வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம். மையத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது ஏ.டி.எம். அருகே நின்று கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை வங்கி அதிகாரிகள் காலால் எட்டி உதைத்தும், ரப்பர் கயிறு மூலமாக தொடர்ந்து கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த காட்சியை அங்கு கூடியிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்தனர். இதையடுத்து இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தலங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை கடுமையாக தாக்கிய வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.