செங்கல்பட்டில் பா.ம.க. இன்று போராட்டம்: அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடக்கிறது
கூலிப்படைகளை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி செங்கல்பட்டில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று போராட்டம் நடைபெறுகிறது.
சென்னை,
செங்கல்பட்டு மணிக்கூண்டு அருகே பா.ம.க. நகர செயலாளர் பூக்கடை நாகராஜ் கூலிப்படையினரால் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், பா.ம.க.வினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நிகழ்ந்துள்ள இக்கொலை அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு.
மறைமலைநகர் பகுதியில் பா.ம.க. நிர்வாகி மனோகரன், வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் காட்டூர் காளிதாசன், செங்கல்பட்டில் பூக்கடை நாகராஜ் என கடந்த மே 22-ந் தேதியில் இருந்து இப்போது வரையிலான 50 நாட்களில் பா.ம.க. நிர்வாகிகள் 3 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கூலிப்படை அட்டகாசம்
செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் லோகேஷ் என்பவர் கொடூரமான முறையில் நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். கடந்த 6 மாதங்களில் மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அனைத்திலும் கூலிப்படையினர் சம்பந்தப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் கூலிப்படையினரின் கூடாரமாக மாறி வரும் நிலையில், அவர்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறை வேடிக்கை பார்க்கிறது.
தலைநகர் சென்னையில் தொடங்கி தமிழகம் முழுவதும் கூலிப்படை கொலைகள் அதிகரித்து விட்டன. கடலூரில் தி.மு.க. எம்.எல்.ஏ. பங்கேற்ற நிகழ்வில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கூலிப்படையின் அட்டகாசங்களும், கொலைகளும் அதிகரித்து வருவதும், அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறுவதும் அத்துறையை கவனிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குதான் அவப்பெயரை சேர்க்கும்.
இன்று போராட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகரித்து வரும் கூலிப்படை அட்டகாசங்களை முழுமையாக ஒழிக்க அதிரடி நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும். உத்தரபிரதேசத்தில் ஒழிக்கப்பட்டதைப் போல தமிழ்நாட்டிலும் கூலிப்படையினர் ஒடுக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு நகரம் அம்பேத்கர் சிலை அருகில் பா.ம.க. சார்பில் 11-ந்தேதி (இன்று) காலை 11 மணிக்கு மாபெரும் போராட்டம் நடத்தப்படும். அப்போராட் டத்திற்கு பா.ம.க. தலைவரான நானே தலைமையேற்கிறேன்.
பா.ம.க. மற்றும் அதன் துணை அமைப்புகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளை அமைப்புகளின் நிர்வாகிகளும், பாட்டாளி சொந்தங்களும் போராட்டத்தில் பங்கேற்பார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.