குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு ரசாயன உரங்கள் கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்

குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு ரசாயன உரங்களை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.;

Update:2023-07-10 00:45 IST

குறுவை தொகுப்பு திட்டம்

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள குளிக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு ரசாயன உரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு ரசாயன உரங்களை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.19¼ கோடி

திருவாரூர் மாவட்டத்தில் 61 ஆயிரத்து 588 எக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை 26 ஆயிரத்து 16 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ரூ.75 கோடியே 95 லட்சம் மதிப்பில் குறுவை தொகுப்பு திட்டத்தினை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். இதில் ரூ.19 கோடியே 27 லட்சம் திருவாரூர் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்துக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 60 ஆயிரம் ஏக்கருக்கு 100 சதவீதம் மானியத்தில் ரசாயன உரங்கள், ஒரு ஏக்கருக்கு யூரியா 45 கிலோ, டி.ஏ.பி. 50 கிலோ, பொட்டாஷ் 25 கிலோ என ஒரு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரத்து 466 மதிப்பில் உரம் வழங்கப்படுகிறது. மேலும் குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள், பசுந்தாள் உரவிதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

எண்ணெய் வித்துக்கள்

குறுவை பருவத்தில் பயிர் பல்வகைபடுத்துதல் திட்டத்தின் கீழ் மாற்றுப்பயிரியினை ஊக்குவிக்கும் விதமாக நெல் சாகுபடி செய்யாத விவசாயிகளுக்கு 10 ஏக்கர் பரப்புக்கான சிறுதானியம், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் பயிரிட மானிய விலையில் தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன.

சிறுதானிய தொகுப்பில் ஏக்கர் ஒன்றுக்கு 50 சதவீத மானியத்தில் 4 கிலோ விதையும், மண்ணில் இடும் நுண்ணுயிரி, உயிர் உரங்கள் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டிரியா, திரவ இயற்கை உரங்கள் மற்றும் அதன் தெளிப்புச் செலவினம் 750 ரூபாயும் ஆக மொத்தம் ஒரு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரத்து 234 மதிப்பில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளன.

பயறு வகை பயிர்கள்

பயறு வகை தொகுப்பில் திரவ இயற்கை உரங்கள் மற்றும் அதன் தெளிப்பு செலவினம் 1500 ரூபாயும் ஆக மொத்தம் ஒரு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரத்து 716 மதிப்பில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளன.

மேலும் எண்ணெய் வித்துக்கள் தொகுப்பில் ஏக்கர் ஒன்றுக்கு ஒரு ஏக்கருக்கு 80 கிலோ விதை ரூ.10 ஆயிரத்து 480 மதிப்பில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளன.

வேளாண்மை பொறியியல் துறை மூலம் களை எடுக்கும் கருவி, பவர் டில்லர் உள்ளிட்ட கருவிகள் 50 சதவீத மானிய விலையில் சிறு குறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் விவசாயிகளுக்கும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியத்திலும் வழங்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்