ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில்ரசாயனம் கலப்பால் நுரையாக செல்லும் கழிவுநீர்விவசாயிகள் கவலை
ஓசூர்:
ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் ரசாயனம் கலப்பால் வெள்ளை நுரையாக செல்லும் கழிவுநீரால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கெலவரப்பள்ளி அணை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று வினாடிக்கு 340 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து தண்ணீர் அப்படியே 3 மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரானது தென்பெண்ணை ஆற்றுக்கு செல்லும் போது ரசாயனம் கலந்து கழிவுநீராக நுங்கும் நுரையுமாக கழிவுநீர் செல்கிறது. இதனை கண்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கவலை
தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக வெளியேறும் ரசாயன நுரையில் துர்நாற்றம் வீசுவதுடன் வெள்ளை நிறத்தில் பனி போர்த்தியது போல் காணப்படுகிறது. மேலும் இவை காற்றில் பறந்து அந்த பகுதியில் உள்ள செடி, கொடிகள் மீது திட்டு, திட்டாக படர்வதும், அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது விழுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.