சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு

சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2022-09-25 23:31 GMT

திருவெறும்பூர்:

தீவிர கண்காணிப்பு

தமிழகத்தில் என்.ஐ.ஏ. சோதனையை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களின் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருவெறும்பூர் உட்கோட்டத்தில் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூரில் உள்ள ஒரு தியேட்டர் அருகிலும், மஞ்சள் திடல் பாலம் அருகிலும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் போலீசார் அந்த பகுதியில் வரும் வாகனங்களை கண்காணித்து, சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாகனங்களில் சோதனை

இதேபோல் திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கல்லூரி அருகே நவல்பட்டு போலீசார் சோதனைச்சாவடி அமைத்து அந்த வழியாக சென்று வரும் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். மேலும் சமூக விரோதிகள் ஊடுருவலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்