தலைவாசல் அருகே சிறுவாச்சூர் செல்வ மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்
சிறுவாச்சூரில் உள்ள செல்வ மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
தலைவாசல்:
செல்வ மாரியம்மன் கோவில்
தலைவாசல் அருகே சிறுவாச்சூரில் செல்வ மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 28-ந் தேதி காப்பு கட்டி சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்தனர். அம்மனுக்கு நேற்று பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். சில பக்தர்கள் கோவில் முன்பு கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காலை 8 மணிக்கு பக்தர் ஒருவர் காளி வேடம் அணிந்து ஊர்வலமாக வந்தார். பின்னர் காளி கோட்டை இடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்தன.
தேரோட்டம்
இதையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். பின்னர் மதியம் 2.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் பலர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாலை 5 மணிக்கு நிலையை அடைந்தது.
தேரோட்டத்தில் மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஜெய்சங்கரன் எம்.எல்.ஏ., தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும் தலைவாசல், புத்தூர், வரகூர், வேப்பநத்தம், ஊனத்தூர், நாவக்குறிச்சி, மணி விழுந்தான், பட்டுத்துறை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவில் இன்னிசை நிகழ்ச்சி, நாடகம் போன்றவை நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.