அய்யனார், பொன்னியம்மன் கோவில்களில் தேரோட்டம்

விருகாவூர் அய்யனார், பொன்னியம்மன் கோவில்களில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

Update: 2023-10-04 18:45 GMT

தியாகதுருகம்

தியாகதுருகம் அருகே விருகாவூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார், பொன்னியம்மன் மற்றும் மாரியம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இக்கோவிலில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருவிழா நடைபெற்றது. இதன் பிறகு இந்த ஆண்டு திருவிழா கடந்த 11-ந்தேதி சிறப்பு வழிபாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து சாமிகளுக்கு தினமும் சிறப்பு வழிபாடு, பாரதம் படித்தல், சாமி வீதி உலா மற்றும் பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

விழாவின் சிகர நிகழ்ச்சியான அய்யனார் மற்றும் பொன்னியம்மன் ஆகிய சாமிகளுக்கு தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் அய்யனார் மற்றும் பொன்னியம்மன் ஆகிய சாமிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தனித்தனி தேரில் அமர்த்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கே திரண்டு நின்ற பக்தர்கள் 2 தேர்களையும் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பின்னர் நிலையை அடைந்தது. இதில் விருகாவூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். மேலும் வருகிற 7-ந் தேதி மாரியம்மனுக்கு தேர் திருவிழா நடைபெறுகிறது. தொடர்ந்து 8-ந் தேதி மஞ்சள் நீராட்டுதலுடன் திருவிழா நிறைவடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்