குணச்சித்திர நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மறைவு - நடிகர் கமல்ஹாசன் இரங்கல்
குணச்சித்திர நடிகர் ஆர்.எஸ்.சிவாஜியின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
குணச்சித்திர நடிகரான ஆர்.எஸ். சிவாஜி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆர்.எஸ்.சிவாஜியின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
"எனது நண்பரும், சிறந்த குணச்சித்திர நடிகருமான ஆர்.எஸ். சிவாஜி மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை கொள்கிறேன். சிறிய கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்கள் மனதில் காலம் கடந்தும் நீடிக்கும்படியான உயிரோட்டத்தை அளிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர். எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவே பெரிதும் அறியப்பட்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.