மணல் குவாரி இயங்கும் நேரத்தை மாற்ற வேண்டும்
கபிஸ்தலம் அருகே புத்தூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி இயங்கும் நேரத்தை மாற்ற வேண்டும் என கிராம மக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.;
கபிஸ்தலம்;
கபிஸ்தலம் அருகே புத்தூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி இயங்கும் நேரத்தை மாற்ற வேண்டும் என கிராம மக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பொதுமக்கள் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
மணல் குவாரி
கபிஸ்தலம் அருகே உள்ள கோவிந்தநாட்டுசேரி ஊராட்சி புத்தூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இங்கிருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மூலம் மணல் அள்ளி கபிஸ்தலம், சுவாமிமலை வழியாக கும்பகோணம் பகுதிக்கும் கணபதிஅக்ரஹாரம் வழியாக திருவையாறு, தஞ்சாவூர் பகுதிக்கும் மணல் லாரிகள் சென்று வருகின்றன. இவ்வாறு செல்லும் லாரிகளால் காலை நேரத்தில் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் அரசு மற்றும் தனியார் பணிக்கு செல்லும் பணியாளர்கள் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன இடர்பாடுகளால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
தார்ப்பாய்
மேலும் விபத்து ஏற்படும் நிலையும் உள்ளது. இதை சீர் செய்ய காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் கனரக மணல் லாரிகள் இயக்குவதை நிறுத்தி மணல் லாரிகள் இயங்கும் நேரத்தை மாற்றி சீர் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் எந்த வித பாதிப்பும் இன்றி சென்று வருவார்கள். மேலும் மணல் குவாரியில் இருந்து மணல் அள்ளிச் செல்லும் லாரிகள் மணல் மேல் தார்ப்பாயை விரிக்காமல் செல்கிறார்கள். இதனால் மணல் அள்ளி செல்லும் லாரிளில் இருந்து மணல்கள் சாலை ஓரம் செல்பவர்கள் மீது காற்றில் பறப்பதால் கண்களில் மணல் விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.இதனை தவிர்த்து மணல் குவாரியில் இருந்து மணல் ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களும் தார்ப்பாய் போட்டுச் செல்ல வேண்டும் என உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.