மது விற்பனை குறித்த வீடியோ 'வைரல்'போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்
மது விற்பனை குறித்த வீடியோ ‘வைரல்’ ஆனதை தொடர்ந்து போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
சேலம்,
சேலம் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் அருகில் பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலை வேளையில் மது விற்பனை நடந்ததாகவும், மதுபிரியர்கள் சிலர் உள்ளே சென்று மது அருந்திவிட்டு வெளியே வருவதுமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது, அந்த வழியாக ரோந்து சென்ற போலீஸ் ஏட்டு கோவிந்தன் என்பவர், அந்த பாருக்கு சென்று அங்கிருந்த ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். அதில், டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே மது விற்பனை ஜோராக நடக்கிறதே? இதை எல்லாம் உங்கள் போலீஸ் உயர் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பார்கள்? ஆனால் மக்களின் பிரச்சினைக்கு யாராவது போராடினால் அவர்களை கைது செய்வீர்கள்? என்று அந்த போலீஸ் ஏட்டுவை பார்த்து கேள்வி கேட்டுள்ளார். அதற்கு மது விற்பனை தொடர்பாக சில தவறான கருத்துக்களை ஏட்டு கோவிந்தன் பேசும் வீடியோ தற்போது வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் கமிஷனர் நஜ்முல்ஹோடா விசாரணை நடத்தி நேற்று செவ்வாய்பேட்டை போலீஸ் ஏட்டு கோவிந்தனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.