நிலவில் வெற்றிகரமாக இறங்கிய சந்திரயான்-3 விண்கலம்-இனிப்பு வழங்கி கொண்டாடிய பொதுமக்கள்

நிலவில் சந்திரயான்-3 வெற்றிகரமாக இறங்கியதை காரைக்குடியில் பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Update: 2023-08-23 18:45 GMT

காரைக்குடி

நிலவில் சந்திரயான்-3 வெற்றிகரமாக இறங்கியதை காரைக்குடியில் பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

நேரடி ஒளிபரப்பு

நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 என்ற விண்கலத்தை ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ந் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக விண்ணில் ஏவினர். இதையடுத்து நேற்று மாலை 6.04 மணிக்கு நிலவில் சந்திரயான்-3 விண்கலம் இறங்கும் என அறிவிக்கப்பட்டதையடுத்து நாடு முழுவதும் மக்கள் இதை கண்டறிவதற்காக ஆர்வமாக இருந்தனர். சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இதற்காக ஆங்காங்கே பெரிய திரையில் நேரடி காட்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

காரைக்குடி ஸ்ரீராம்நகர் பகுதியில் உள்ள அழகப்பர் முன்னாள் மாணவர்கள் பூங்காவில் பெரிய திரையில் சந்திரயான்-3 நிலவில் இறங்கும் நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள், பெண்கள், குழந்தைகள், சமூக ஆர்வலர்கள் அங்கு திரண்டனர்.

இனிப்பு வழங்கி மகிழ்ச்சி

மாலை 6.04 மணிக்கு சந்திரயான் நிலவில் இறங்கும் நேரடி காட்சியை அங்கு திரண்டிருந்த மக்கள் பார்த்ததும் உற்சாகமாக கைதட்டி ஆரவாரமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் அங்கு திரண்டிருந்த மக்கள் ஒருவருக்கொருவர் கைகளை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.

அந்த வழியாக சாலையில் சென்ற பஸ், மோட்டார்சைக்கிள், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்களும் அங்கு நின்றபடியே இந்த நேரடி காட்சிகளை பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதையொட்டி அப்பகுதியில் அழகப்பாபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்