சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை மாலை வரை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update:2024-01-07 21:04 IST

சென்னை,

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் உள்பகுதிகளில் மிக தீவிரம் அடைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தென்மாவட்டங்களின் உள் பகுதிகளில் அனேக இடங்களிலும், கடலோ மாவட்டங்களில் சில இடங்களிலும், வட மாவட்டங்களின் உள் பகுதிகளிலும் மழை பெய்து இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை வானிலை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்" என்று தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று மாலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை மாலை வரை மிக கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்