ராமேசுவரம் கோவிலில் மீண்டும் தங்கத்தேர்

12 ஆண்டுகளுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் மீண்டும் தங்கத்தேர் பயன்பாட்டுக்கு வந்தது. அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

Update: 2022-10-31 17:48 GMT

ராமேசுவரம், 

12 ஆண்டுகளுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் மீண்டும் தங்கத்தேர் பயன்பாட்டுக்கு வந்தது. அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

தங்கத்தேர்

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கடந்த 2001-ம் ஆண்டு இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் சுமார் 17 அடி உயரத்தில் புதிதாக தங்கத்தேர் ஒன்று செய்யப்பட்டது. இந்த தங்க தேரை இழுப்பதற்கு ரூ.2,000 திருக்கோவில் நிர்வாகத்தால் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த தங்கத்தேரை மூன்றாம் பிரகாரத்தில் இழுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர். இதனிடையே கடந்த சில ஆண்டுகளாகதங்க தேர் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த ஆண்டு ராமேசுவரம் கோவிலில் ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தங்க தேரை உடனடியாக பராமரித்து பாலிஷ் செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டார்.

புதுப்பொலிவு

இதைதொடர்ந்து திருப்பணிகள் முடிந்து பாலிஷ் செய்யப்பட்ட தங்க தேரை நேற்று இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார். பின்னர் புதுப்பொலிவு பெற்ற தங்கத்தேரில் பர்வதவர்த்தினி அம்பாள் அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. தங்கத்தேரை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையாளர் குமரகுருபரன், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் வடம் பிடித்து தங்க தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

மூன்றாம் பிரகாரத்தின் அம்மன் சன்னதி மைய மண்டபத்தில் இருந்து தொடங்கிய இந்த தங்கத்தேரை ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு இழுத்தபடி மூன்றாம் பிரகாரத்தை சுற்றி நிலைக்கு வந்தது. தங்க தேரோட்ட நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைய துறை செய்தி துைற உதவி இயக்குனர் நடராஜன், ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பாண்டி, நகரசபை தலைவர் நாசர் கான், துணைத்தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், ராமநாதபுரம் ராஜாநாகேந்திர சேதுபதி, ராணி லட்சுமி குமரன் சேதுபதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பராமரிப்பு

அப்போது அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறிய தாவது:- ராமேசுவரம் கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக தங்கத்தேர் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த தங்கத்தேர் பராமரித்து பாலிஷ் செய்யப்பட்டு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பக்தர்கள் இழுக்க பயன் பாட்டுக்கு கொண்டுவரப் பட்டு உள்ளது.

இதே போல் திருத்தணி மற்றும் சமயபுரத்தில் உள்ள கோவில்களில் உள்ள தேர்களும் பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.

விசாரணை

ராமேசுவரம் கோவிலில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் தேய்மானம் குறித்து விளக்கம் கேட்டு பலருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இது குறித்து கடிதம் அனுப்பப்பட்டு உள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும். விசாரணைக்கு பின்னர் தான் தங்கம் மற்றும் வெள்ளி குறைவதற்கு காரணமானவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவிலுக்கு சொந்தமான பொருட்களில் யார் தவறு செய்து இருந்தாலும் கண்டிப்பாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே தங்கத்தேர் இழுக்க ரூ.2000 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க ஆலோசனை நடத்தி அதன் பின்னர் அதிகாரப்பூர்வமாக புதிய கட்டணம் தெரிவிக்கப்படும். கோவிலின் சாமி சன்னதி பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி எதிரே பக்தர்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் நிரந்தரமாக அகற்றப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

12 ஆண்டுகளுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் மீண்டும் தங்கத்தேர் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்