ஆவடி பஸ் நிலையத்தில் போலீஸ் போல் நடித்து வாலிபரிடம் சங்கிலி பறிப்பு

ஆவடி பஸ் நிலையத்தில் போலீஸ் போல் நடித்து வாலிபரிடம் சங்கிலி பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-07-09 03:50 GMT

செங்குன்றம் பொன்னியம்மன்மேடு காமாட்சியம்மன் நகரை சேர்ந்தவர் வேதநாதன் (வயது 23). இவர், நேற்று முன்தினம் அம்பத்தூர் செல்வதற்காக ஆவடி பஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவரிடம் மர்ம நபர் ஒருவர், "நான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். 'மப்டி'யில் இருக்கிறேன். உன்னை விசாரிக்க வேண்டும் வா" என்று கூறி அவரை தனியாக அழைத்து சென்றார்.

பின்னர், "நீ ஒரு பெண்ணை கடத்திச்செல்ல வந்திருப்பதாக தெரிகிறது. உன்னை விட்டுவிட வேண்டும் என்றால் ரூ.50 ஆயிரம் கொடு. இல்லை என்றால் போலீஸ் நிலையத்துக்கு வா" என மிரட்டினார். இதனால் பயந்து போன வேதநாதன், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றார்.

இதையடுத்து மர்மநபர், வேதநாதன் கழுத்தில் கிடந்த 1 பவுன் சங்கிலியை கழற்றி தரும்படி மிரட்டி வாங்கி சென்று விட்டார். பின்னர்தான் அந்தநபர் தன்னிடம் போலீஸ் போல் நடித்து நூதன முறையில் சங்கிலியை பறித்து சென்றதை வேதநாதன் அறிந்தார். இதுபற்றி ஆவடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஆவடி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்