மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தமிழர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தமிழர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆந்திரப் பிரதேசம், அரியானா, கர்நாடாக, மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் உள்ளூர் மக்களை 75 விழுக்காடு பணியில் அமர்த்த தனியார் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டம் நிறைவேற்றியிருக்கிற நிலையில், தமிழ்நாட்டில் அமைந்துள்ள மத்திய அரசின் 'நவரத்னா' நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பிற மாநிலங்களைச் சேர்ந்த 299 பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களிடையே கடும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, நாட்டின் தொழில் வளர்ச்சிக்காகவும், மின் தேவைக்காகவும், சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்பு தங்களது நிலங்களை பல்வேறு ஏழை, எளிய கிராம மக்கள் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு வழங்கினர். நிலம் வழங்கியவர்களுக்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற உறுதிமொழி நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்டு இருந்தாலும், அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என்பதும், இதற்கு மாறாக, பிற மாநிலத்தவர்களை நிரந்தரப் பணியாளர்களாக அமர்த்துவதும், தமிழர்களை, குறிப்பாக நிலம் கொடுத்தவர்களை ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகப் பணியாளர்களாக அமர்த்துவதும் தொடர் கதையாக இருந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. இதுதான் பாதிக்கப்பட்டவர்களின் குற்றச்சாட்டாகவும் இருந்து வருகிறது.
இதனை நிரூபிக்கும் வகையில், இயந்திரவியல், மின்னியல், கட்டடவியல், சுரங்கவியல், வேதியியல், நிலத்தியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 299 பொறியாளர்களை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தேர்ந்தெடுத்து இருப்பதாகவும், இந்த 299 பொறியாளர்களில் ஒருவர்கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது.
'கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு' என்று பாடிய தேசிய கவிஞர் பாரதி பிறந்த தமிழ் மண்ணில், அண்ணா பல்கலைக்கழகம், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த திரு. A.P.J. அப்துல் கலாம் அவர்கள் படித்த Madras Institute of Technology உள்ளிட்ட பல்வேறு தலைசிறந்த பொறியியல் கல்லூரிகள் இருக்கின்ற இந்த மண்ணில், திறமையின் பிறப்பிடமாக விளங்கும் இந்த தமிழ் மண்ணில், பொறியியல் பட்டம் பெற்ற திறமையான தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருக்கின்ற நிலையில், தமிழ்நாட்டை முற்றிலுமாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் புறக்கணித்து இருப்பது நியாயமற்ற செயல்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.