'மத்திய அரசின் நிதி தவறாக பயன்படுத்தப்படவில்லை'-அப்பாவு பேட்டி
மத்திய அரசின் நிதி தவறாக பயன்படுத்தப்படவில்லை என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
'மத்திய அரசின் நிதி தவறாக பயன்படுத்தப்படவில்லை' என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
அப்பாவு பேட்டி
தமிழக சபாநாயகர் அப்பாவு குற்றாலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசுக்கும், தமிழகத்திற்கும் ஜி.எஸ்.டி. வரி தொடர்பான ஒப்பந்தம் உள்ளது. தமிழகத்தில் இருந்து 1 ரூபாய் வரி மத்திய அரசுக்கு நாம் செலுத்தினால் 17 பைசா நமக்கு வரும்.
ஆனால் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து மத்திய அரசுக்கு 1 ரூபாய் செலுத்தினால் அந்த மாநிலத்திற்கு மத்திய அரசின் நிதி 2 ரூபாயாக வருகிறது. ஏன் இந்த பாரபட்சம்?. மத்திய அரசின் நிதி தமிழகத்தில் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். மத்திய அரசின் நிதி தவறாக பயன்படுத்தப்படவில்லை.
கல்வி வளர்ச்சி
சமீபத்தில் கூட அரசுடன் ஒரு நிறுவனம் தொழில் தொடங்குவதற்காக ரூ.1,600 கோடி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதுவரை 4½ லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. 1971-ம் ஆண்டு முதல் இன்றுவரை தமிழகத்தில் கல்வி வளர்ச்சி நன்றாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
செயற்குழு கூட்டம்
முன்னதாக தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் கட்டுமான தொழில் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் பழனி நாடார் எம்.எல்.ஏ., தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காமராஜர் சிலைக்கு மரியாதை
சபாநாயகர் அப்பாவுக்கு, பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகில் காங்கிரஸ் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது, பழனிநாடார் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன், சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளிமுருகன், கீழப்பாவூர் யூனியன் துணை சேர்மன் முத்துகுமார், ஐ.என்.டி.யு.சி. வைகுண்டராஜா, மாவட்ட துணைத்தலைவர் செல்வன் உள்பட பலர் உடன் சென்றனர்.