கைப்பம்பு மீது போடப்பட்ட சிமெண்டு சாலை
கள்ளக்குறிச்சி அருகே கைப்பம்பு மீது சிமெண்டு சாலை போடப்பட்டுள்ளதால் குடிநீர் பிடிக்க முடியாமல் மக்கள் அவதியடைகிறார்கள்.
கச்சிராயப்பாளையம்:
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, கிராமங்களில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் மோட்டார் சைக்கிள், ஆழ்துளை கிணறு, கைப்பம்பு, கார், ஜீப் போன்றவற்றை அகற்றாமலேயே அதன் மீது சாலை போட்டுள்ளனர்.
இது பற்றிய வீடியோ, புகைப்படம் வெளியானதும் உடனடியாக சரிசெய்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. மேலும் பணியின்போது அஜாக்கிரதையாக செயல்பட்ட ஒப்பந்ததாரர், என்ஜினீயர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இது போன்ற சம்பவம் பல இடங்களில் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது.
சிமெண்டு சாலை
அந்தவரிசையில் கள்ளக்குறிச்சி அருகே மாதவச்சேரி காலனியிலும் கைப்பம்பு மீது சாலை போடப்பட்டுள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-
கள்ளக்குறிச்சி ஒன்றியம் மாதவச்சேரி காலனியில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள மாரியம்மன் கோவில் தெரு மண் சாலையாக இருந்தது. இந்த சாலையோரத்தில் இருந்த கைப்பம்பு மூலம் அந்த தெரு மக்கள் குடிநீரை பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் மண் சாலையில் சிமெண்டு சாலை அமைக்க ஒன்றிய அலுவலகம் முடிவு செய்தது. அதன்படி கடந்த வாரம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வாய்க்காலுடன் சிமெண்டு சாலை போடப்பட்டுள்ளது.
கைப்பம்பை அகற்றாமலேயே...
அதாவது கைப்பம்பை அகற்றாமலேயே அதன் மீது சிமெண்டு சாலை போட்டுள்ளனர். பாதியளவு கைப்பம்பு சிமெண்டு சாலையில் புதைந்த நிலையில் உள்ளது. இதனால் அதில் குடத்தை வைத்து தண்ணீர் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த கைப்பம்பை பயன்படுத்த முடியாமலும், குடிநீர் கிடைக்காமலும் அந்த தெரு மக்கள் அவதிப்படுகிறார்கள்.
அலட்சியம்
இது குறித்து அந்த தெரு மக்கள் கூறுகையில், சாலை போடும்போதே கைப்பம்பை அகற்றி மாற்று இடத்தில் வைத்து தருமாறும், இல்லையெனில் அதே இடத்தில் கைப்பம்பை உயர்த்தி தரக்கோரியும் ஒப்பந்ததாரரிடமும், அதிகாரிகளிடமும் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். இந்த கைப்பம்பு மூலம் மீண்டும் குடிநீர் கிடைக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மாதவச்சேரியில் கைப்பம்பின் நிலை குறித்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகிறது. இதை பார்த்த நெட்டிசன்களும் தங்களது கருத்து மூலம் வறுத்தெடுக்கிறார்கள்.