கோவில்களில் செல்போன்களுக்கு தடை

கோவில்களில் செல்போன்களுக்கு தடை விதித்ததுக்கு பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2022-11-13 18:45 GMT

திருப்பதி கோவிலுக்குள் யாரும் செல்போன் கொண்டு போக முடியாது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும் அவ்வாறே செல்போன்கள் கொண்டு போக அனுமதி இல்லை. செல்போன்களை டிக்கெட் வாங்கிக் கொண்டு லாக்கர்களில் வைத்துவிட வேண்டும். சாமி கும்பிட்டு திரும்பி வரும்போது டிக்கெட்டை கொடுத்து விட்டு செல்போன்களை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.

செல்போன்களுக்கு தடை

அதுபோல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் இனி செல்போன்கள் கொண்டு போக முடியாது. அங்கு செல்போன்களுக்கு தடைவிதிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு ஆணையிட்டு இருக்கிறது.

திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகராக இருக்கும் சீதாராமன் என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்து இருந்தார்.

''சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்களுக்கு இடையூறாக செல்போன்களை பயன்படுத்துவது, சுவாமிக்கு நடக்கும் தீபாராதனையை செல்போன்களில் பதிவு செய்வது, சிலைகள் முன்பு செல்பி எடுத்துக் கொள்வது, சிலைகளை படம் எடுப்பது போன்ற செயல்களில் பலர் ஈடுபடுகிறார்கள். எனவே திருச்செந்தூர் கோவிலில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போதுதான் நீதிபதிகள் மேற்கண்ட ஆணையைப் பிறப்பித்தார்கள்.

ஆதங்கம்

நீதிபதிகள் அப்போது வெளியிட்ட சில கருத்துகள், அவர்களின் மனவருத்தங்களை வெளிபடுத்தும் விதமாக அமைந்துள்ளன.

* கோவிலுக்குள் நடக்கும் பூஜைகளை அர்ச்சகர்களே வீடியோ எடுத்து தனிப்பட்ட யூடியூப் சேனல்களில் பதிவிடுகிறார்கள். இது ஏற்கத்தக்கது அல்ல.

* திருப்பதி கோவிலில் வாசலைக்கூட படம் எடுக்க முடியாது. தமிழ்நாட்டில் சாமி சிலை முன்பு செல்பி எடுக்கும் அளவுக்கு சுதந்திரம் இருக்கிறது.

* கோவில்கள் சுற்றுலா தலங்கள் அல்ல. கோவிலுக்கு டீ-சர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்க முடியவில்லை.

இவ்வாறு ஆதங்கப்பட்ட நீதிபதிகள் திருச்செந்தூர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதை தடை செய்ய அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிவிட்டு, அதன் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறநிலையத் துறை கமிஷனருக்கு உத்தரவிட்டும் இருக்கிறார்கள்.

ஆவல் அதிகரிப்பு

பொதுவாக புதிய இடங்களுக்கோ, தொன்மையான இடங்களுக்கோ செல்கிறபோது அதன் அடையாளமாக புகைப்படம் எடுத்துக் கொள்ளும் ஆவல் அனைவரிடமும் இருப்பது இயல்பே. அதுவும் செல்போன் மனிதர்களின் ஆறாவது விரலாக மாறிவிட்ட நிலையில் அது பேராவலாக அதிகரித்துவிட்டது என்றே சொல்லலாம்.

இந்தநிலையில் கோவிலுக்குள் செல்போன்கள் கொண்டு போவதற்கு தடைவிதிப்பது பற்றி பொதுமக்கள் குறிப்பாக பக்தர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதை காண்போம்.

நிரந்தரமாக தடை

மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளியை சேர்ந்த லட்சுமி:-

திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் எடுத்துச் செல்ல தடை என்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான். கோவில்களுக்கு பக்தர்கள் மனஅமைதிக்காக வருகின்றனர். மேலும் சாமியை தரிசனம் செய்து வழிபடும்போது, பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை இறைவனிடத்தில் மனதளவில் முறையிடுவார்கள். அதற்கு கோவிலில் அமைதியான சூழ்நிலை இருந்தால்தான் பக்தர்கள் மனநிறைவோடு வழிபட முடியும்.

கோவில்களுக்குள் செல்போன்களை அனுமதிப்பதால் அங்கு அமைதி சீர்குலைகிறது. சாமியை வழிபடும்போது, செல்போன் ஒலிப்பதன் மூலம், வழிபாடு தடைபடுகிறது. அதிலும் சிலர் முறையற்ற வார்த்தைகளை கொண்ட பாடல்களை செல்போன் ரிங்டோன்களாக வைத்து உள்ளனர். அதனால் பிற பக்தர்களுக்கு தர்மசங்கடமான சூழ்நிலை உருவாகும். மேலும் ஒரு சிலர் செல்போனில் பேசும்போது இடம் பொருள் அறிந்து மெதுவாக பேசுவது இல்லை. சத்தமாகவும், கூச்சலிட்டு ஆர்ப்பரித்துக் கொண்டும் பேசுகிறார்கள். இதனால் பக்தர்கள் மன அமைதியோடு ஆன்மிக சிந்தனையில் ஈடுபட முடிவதில்லை. எனவே கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்.

வேதனை அளிக்கிறது

ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் பூசாரி செல்வம்:-

செல்போன் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் வைத்து உள்ளனர். குறிப்பாக இளைஞர்கள், இளம்பெண்கள் தங்களின் அன்றாட நடவடிக்கைகளை செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதை முக்கிய பணியாக செய்து வருகின்றனர். அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பெரும்பாலானோர் உணர்வதில்லை.

தற்போது கோவில்களில் செல்பி எடுப்பதும், கருவறைக்கு அருகே வந்து சாமியை தரிசிப்பது போல நின்று செல்பி எடுப்பதும் அதிகரித்துவிட்டது. அது சாமியை அவமதிக்கும் செயலாகும். கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து மனதார வழிபடுவதில் கிடைக்கும் நிம்மதியைவிட, அதை செல்பி எடுத்து பரப்புவதை நிம்மதியாக சிலர் கருதுவது வேதனை அளிக்கிறது. அதை தவிர்க்க அறிவுறுத்தினாலும், அவர்கள் அதை ஏற்றுக்கொள்வதில்லை.

இதனால் பெரும்பாலான பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. இந்த சூழலில் திருச்செந்தூர் கோவிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதித்திருப்பது நல்ல வழிகாட்டுதலாக அமையும். இனிவரும் காலங்களில் படிப்படியாக அனைத்து கோவில்களிலும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஏற்புடையதல்ல

வெண்ணந்தூர் அருகே உள்ள காணம்பாளையத்தை சேர்ந்த மாரப்பன்:-

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் கருவறைக்கு அருகே செல்லும் இடத்தில் செல்போன்களில் புகைப்படம் எடுக்க தடை என்ற அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டு இருப்பதை காண முடியும். குறிப்பாக பிரசித்தி பெற்ற கோவில்களில், அந்த நடைமுறை தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் அதையும் மீறி சிலர் சாமிகளுக்கு நடக்கும் அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகளை வீடியோ பதிவு செய்து பரப்புகின்றனர். அது ஆன்மிக நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஏற்புடையதல்ல.

ஆன்மிகத்தை நாடி வருபவர்கள் சாமி சன்னதியில் மன அமைதியோடு எவ்வித சிந்தனையும் இன்றி பிரார்த்திக்க வேண்டும். ஆனால் அங்கு செல்பி எடுப்பதிலும், வீடியோ பதிவிடுவதிலும் சிந்தனை இருந்தால், பின்னர் எவ்வாறு அவர்களால் வழிபட முடியும். இத்தகைய வரம்பு மீறுபவர்களுக்கு கோவிலுக்குள் செல்போன்கள் எடுத்துச் செல்ல தடை என்ற தீர்ப்பு கட்டுப்பாடாக அமையும். மேலும் அந்த தீர்ப்பை வலுப்படுத்த கோவில்களில் அதை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்

ஓய்வுபெற்ற ஆசிரியை லலிதா பழனிவேல்:-

கோவில் என்பது மன அமைதிக்கான ஒரு இடம். அங்கு வழிபாடு மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது கோவில்களில் செல்போன் மூலம் போட்டோ எடுப்பது, டிக் டாக் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை பயன்படுத்துவது அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. பலரும் மெய் மறந்து இறைவனை தியானிக்கும்போது, யாரோ ஒருவருடைய செல்போன் ஒலித்தால் அனைவரின் கவனமும் சிதறடிக்கப்படுகிறது. மேலும் கோவில்கள் என்பது மிகவும் புனித தன்மை வாய்ந்தது. அங்கு நவீன கதிர்வீச்சுகளை உடைய செல்போன் பயன்படுத்துவதை தடை செய்யும் இந்த முடிவை மனதார வரவேற்கிறேன். இந்த அருமையான செயல் திட்டத்தை அனைத்து கோவிலிலும் அமல்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்