புழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்
சென்னை புழல் சிறையில் கைதியிடம் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 1700-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். தாம்பரம் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன் (வயது 27) என்பவரும் கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் கைதாகி இங்கு அடைக்கப்பட்டு உள்ளார்.
நேற்று இரவு சிறை போலீசார், கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கைதி சரவணன், தனது அறையில் உள்ள கழிப்பறையில் அமர்ந்து கொண்டு யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். உடனே போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து, அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதிக்கு சிறைக்குள் செல்போன் கிடைத்தது எப்படி? அந்த செல்போனில் அவர் யாருடன் பேசினார்? என விசாரித்து வருகின்றனர்.