ரத்த காயம் ஏற்படுபவர்கள் விவரத்தை போலீசுக்கு தெரிவிக்க செல்போன் செயலி
குமரி மாவட்டத்தில் ரத்த காயம் ஏற்படுபவர்கள் விவரத்தை போலீசுக்கு தெரிவிக்க முதல் முறையாக செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிமுகப்படுத்தி வைத்தார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் ரத்த காயம் ஏற்படுபவர்கள் விவரத்தை போலீசுக்கு தெரிவிக்க முதல் முறையாக செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிமுகப்படுத்தி வைத்தார்.
புதிய செயலி அறிமுக விழா
குமரி மாவட்டத்தில் போலீஸ் துறையையும், ஆஸ்பத்திரிகளையும் இணைக்கும் வகையில் புதிய செல்போன் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. விபத்து அல்லது தாக்குதலில் ரத்த காயம் ஏற்படுபவர்கள் விவரங்களை போலீசுக்கு தெரிவிக்க இந்த செயலி தொடங்கப்பட்டுள்ளது. 'மெடிக்கோ லீகல் கேஸ் இண்டிமேஷன் சிஸ்டம்' என்று அழைக்கப்படும் இந்த செயலியின் அறிமுக விழா நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார். விழாவில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று புதிய செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும் செயலி தொடர்பான கட்டுப்பாட்டு அறையை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியபோது கூறியதாவது, "தகவல் தொழில்நுட்பம் தற்போது விவசாயிகள், சாதாரண மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. தமிழகத்தில் 235 வகையான அரசு திட்டங்கள் ஆன்லைன் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு 16ஆயிரம் இ-சேவை மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இ-ஆபீஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் பைலட் திட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த மெடிக்கோ லீகல் கேஸ் இண்டிமேஷன் சிஸ்டம் செயலி மாநில அளவில் கொண்டு செல்லப்படும்" என்றார்.
5 ஆஸ்பத்திரிகளுக்கு...
பின்னர் அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களிடம் கூறுகையில், 'விபத்து அல்லது தாக்குதலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுபவர்களின் விவரத்தை போலீசுக்கு தெரியப்படுத்துவதற்காக இந்த செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி டாக்டர்கள் செல்போன் செயலி மூலம் அனுப்பி விடுவார்கள். முதற்கட்டமாக 5 ஆஸ்பத்திரிகளுக்கு இந்த செயலி மூலம் பதிவு செய்ய டேப் லெட் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அனைத்து மருத்துவமனைகளும் இணைக்கப்படும்' என்றார்.
முன்னதாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, தக்கலை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு டேப் லெட்டை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். மேலும் அதிகாரிகளுக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது. விழாவில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், மாவட்ட வன அதிகாரி இளையராஜா, மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்த் மோகன், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் டாக்டர் பிரின்ஸ் பயஸ், உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.