சென்னைக்கு வந்த அமித்ஷாவுடன் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் சந்திப்பு
அரசியல் சாராத பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் அமித்ஷாவை நேரில் சென்று சந்தித்தனர்.
சென்னை,
தமிழகத்தில் பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை வந்தடைந்தார். மராட்டிய மாநிலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவரை மத்திய இணை மந்திரி எல்.முருகன் மற்றும் பல்வேறு பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்றனர்.
தொடர்ந்து வாகனம் மூலம் கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்குச் சென்ற அமித்ஷாவை, அரசியல் சாராத பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் நேரில் சென்று சந்தித்தனர். அதில் இயக்குனர் சங்கத்தலைவர் ஆர்.கே.செல்வமணி, இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவராமகிருஷ்ணன், திரைப்பட தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், விளையாட்டு வீரர் பாஸ்கரன், ஐ.ஜே.கே. கட்சி தலைவர் பாரிவேந்தர் என சுமார் 20-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் அமித்ஷாவை சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின் போது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உடன் இருந்தார். இதைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரியில் இன்று நடைபெறும் பா.ஜ.க. 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.