பெண் என்ஜினீயரிடம் சி.பி.ஐ. அதிகாரி போல பேசி ரூ.16½ லட்சம் மோசடி

திருச்சியில் பெண் என்ஜினீயரிடம் சி.பி.ஐ. அதிகாரி போல பேசி ரூ.16½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-12-23 19:50 GMT

திருச்சியில் பெண் என்ஜினீயரிடம் சி.பி.ஐ. அதிகாரி போல பேசி ரூ.16½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ஜினீயர்

திருச்சி விஸ்வாஸ் நகர் முதல் மெயின் ரோடு 3-வது கிழக்கு குறுக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் மலைக்கொழுந்து. இவரது மகள் விஜயலட்சுமி (வயது 30). இவர் பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சாப்ட்வேர் நிறுவனத்தில் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று இவரது செல்போன் எண்ணுக்கு அடையாளம் தெரியாத நபர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அந்த நபர் தான் ஒரு கூரியர் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும், நீங்கள் தடைசெய்யப்பட்ட விலை உயர்ந்த பொருட்களை தங்களது ஆதார் எண் மூலம் தைவான் நாட்டுக்கு அனுப்பி உள்ளீர்கள். இதனால் உங்களது வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் பணம் சேர்ந்துள்ளது. இது தொடர்பாக உங்கள் மீது நான் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளேன் என கூறியுள்ளார். இதைக் கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

சி.பி.ஐ. அதிகாரி

பின்னர் அடுத்த சில நிமிடங்களில் வாட்ஸ் அப் காலில் மற்றொரு நபர் தொடர்பு கொண்டு பேசினார். அவர் தன்னை சி.பி.ஐ. அதிகாரி என அறிமுகம் செய்து. உங்கள் வங்கிக்கணக்கில் பணம் மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் வந்துள்ளது. இதனால் உங்களுடைய பண பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது. ஆகவே உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் தொகையினை மும்பை நிதித்துறை என்ற பெயரில் இருக்கும் வங்கி கணக்குக்கு தொகையை அனுப்பி வையுங்கள். விசாரணைக்கு பின்னர் அந்தத் தொகை உங்கள் வங்கி கணக்கில் வந்து சேர்ந்துவிடும் என தெரிவித்துள்ளார்.

ரூ.16½ லட்சம் மோசடி

இது பற்றி யாரிடமும் கலந்தாலோசிக்காமல் உடனடியாக தனது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.16 லட்சத்து 44 ஆயிரத்து 876 தொகையினை அந்த நபர் கூறிய வங்கிக்கணக்குக்கு ஆர்.டி.ஜி.எஸ். மூலமாக அனுப்பி வைத்தார். அதன் பின்னர் மாலையில் அந்த நபருக்கு விஜயலட்சுமி தொடர்பு கொண்டார். ஆனால் அந்த நபரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த விஜயலட்சுமி உடனடியாக திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் மூலம் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சிந்துநதி உடனடியாக அந்த வங்கிக்கணக்கை முடக்க நடவடிக்கை மேற்கொண்டார். ஆனால் அதற்கு முன்பாகவே அந்த மோசடி நபர்கள் விஜயலட்சுமி அனுப்பிய ரூ.15 லட்சம் தொகையினை எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்