கூட்டாட்சி தத்துவப்படி காவிரி நீர் பங்கை வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
கர்நாடகா மாநில அணையில் தண்ணீர் இருக்கிறது. ஆனால் கொடுக்க மனதுதான் இல்லை.
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
டெல்லியில் நேற்று நடைப்பெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடக அரசு வழக்கம் போல் மறுப்பு தெரிவித்திருக்கிறது. மிகவும் கண்டிக்கதக்கது. கடந்த 2 மாதங்களாக நீர்பங்கீட்டில் சுமூக நிலை இல்லை. அதாவது 5 டி.எம்.சி தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அதில் பாதியை கூட தரவில்லை. 5 டி.எம்.சிக்கு பதில் 1.6 டி.எம்.சி தண்ணீர் அளித்திருப்பது போதுமானதல்ல என விவசாயிகள் வேதனையை தெரிவிக்கிறார்கள்.
ஐந்து டி.எம்.சி தண்ணீரில் மீதமுள்ள 3.4 டி.எம்.சி தண்ணீரை பெற்றுத்தர வேண்டியது தமிழக அரசின் கடமை. அதனை விவசாயிகளின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு தமிழக அரசு, அதிகாரிகளின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். கர்நாடகா மாநில அணையில் தண்ணீர் இருக்கிறது. ஆனால் கொடுக்க மனதுதான் இல்லை. இரண்டு மாநிலத்திற்கும் தண்ணீர் தேவைதான். கோடைக் காலங்களில் அதிகமான குடிதண்ணீர் தேவை என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
அதே நேரத்தில் தமிழக மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான தண்ணீரை தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்க வேண்டும். தேவையை உணர்ந்து கர்நாடக அரசு கூட்டாச்சி தத்துவத்திற்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.