காவிரி தண்ணீர் கொள்ளிடம் கடைமடை பகுதியை வந்தடைந்தது
நீண்டநாட்களுக்கு பிறகு காவிரி தண்ணீர் கொள்ளிடம் கடைமடை பகுதியை வந்தடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அந்த தண்ணீர் முக்கொம்பு மேலணை வழியாக கல்லணையை வந்தடைந்தது. கல்லணையில் இருந்து காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக கொள்ளிடம், காவிரியின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினாலும் மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் கடைமடை பகுதியான தெற்குராஜன் வாய்க்கால் மற்றும் பொறைவாய்க்கால், புது மண்ணி ஆறு போன்ற நீர்நிலைகளை வந்தடையவில்லை. இதனால், இப்பகுதி விவசாயிகள் கவலையில் இருந்து வந்தனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
இந்தநிலையில் கல்லணையில் இருந்து காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று கொள்ளிடம் கடைமடை பகுதியை வந்தடைந்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் சிலர் கூறுகையில், நீண்ட நாட்களுக்கு பிறகு கடைமடை பகுதியை காவிரி தண்ணீர் வந்தடைந்துள்ளது. இந்த தண்ணீர் குறுவை சாகுபடிக்கு உகந்ததாக இருக்கும். ஒரு சில இடங்களில் குளம், குட்டைகள் நிரம்பி உள்ளது. எனினும், கொள்ளிடம் அருகே எடமணல் கிராமத்தில் இருந்து ராதாநல்லூர் கிராமத்திற்கு செல்லும் வாய்க்காலில் தண்ணீர் இதுவரை வந்தடையவில்லை. ஆகவே, இந்த வாய்க்காலிலும் தண்ணீர் வந்தடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.