காவிரி உரிமை மீட்பு குழுவினர் ரெயிலை மறித்து போராட்டம்

காவிரி நீர் வழங்காத கர்நாடக அரசை கண்டித்து பூதலூரில், காவிரி உரிமை மீட்பு குழுவினர் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-26 20:32 GMT

திருக்காட்டுப்பள்ளி:

காவிரி நீர் வழங்காத கர்நாடக அரசை கண்டித்து பூதலூரில், காவிரி உரிமை மீட்பு குழுவினர் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக அரசை கண்டித்து ரெயில் மறியல்

காவிரி உரிமை மீட்பு குழுவின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகளையும் செயல்படுத்த மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுத்து காவிரியில் தண்ணீர் பெற்றுத்தர வலியுறுத்தியும் தஞ்சை அருகே உள்ள பூதலூரில் ெரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்து இருந்தது.

இதனையடுத்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் போராட்டக்குழுவினர் பூதலூர் பஸ் நிலையம் அருகில் கூடினர்.

போலீசார் தடுத்தனர்

காவிரி உரிமை மீட்பு குழுவின் பொருளாளர் மணிமொழியன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தரவிமலநாதன், காவிரி உரிமை மீட்பு குழுவின் சாமி.கரிகாலன், இந்திய ஜனநாயக கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ், தமிழ் தேசிய பேரியக்கத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் வைகறை மற்றும் திரளான விவசாயிகள் இதில் கலந்து கொண்டனர்.

காவிரியில் தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்களை முழங்கியபடி பூதலூர் ெரயில் நிலையத்தை நோக்கி வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், ரெயில் நிலையத்திற்குள் நுழைய விடாமல் தடுப்புகள் அமைத்தும், கயிறு கட்டியும் தடுத்தனர்.

சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்தனர்

அப்போது திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ெரயில் பூதலூர் ரெயில் நிலையம் வருகிறது என்று தகவல் வந்ததும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்புகளை அகற்றியும், காம்பவுண்ட் சுவர் மீது ஏறி குதித்தும் ரெயில் வரும் தண்டவாளத்தில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

பூதலூர் ரெயில் நிலையத்தில் மணியரசன் உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் தண்டவாளத்தில் அமர்ந்து கோஷங்களை எழுப்பியபடி அமர்ந்து இருந்தனர். மற்றொரு குழுவினர் போலீசாருக்கு தெரியாமல் ரெயில் நிலைய மேற்கு பகுதிக்கு சென்று திருச்சியில் இருந்து வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் அமர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள்.

ரெயில் என்ஜின் டிரைவர் ஒலி எழுப்பியும் நகராத நிலையில் போலீசார் கேட்டுக்கொண்டதன் பேரில் மறியல் செய்தவர்கள் முன்னே செல்ல ரெயில் அவர்கள் பின்னால் சென்றது. ரெயில் பிளாட் பாரத்தில் வந்து நின்றதும் முக்கிய பிரமுகர்கள் ரெயில் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

5 பெண்கள் உள்பட 150 பேர் கைது

இந்த ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்ளிட்ட 150 பேரை திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமதாஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், ஜெயக்குமார் ஆகியோர் கைது செய்து பூதலூரில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த ரெயில் மறியல் போராட்டம் காரணமாக நேற்று சோழன் எக்ஸ்பிரஸ் ெரயில் 25 நிமிடங்கள் தாமதமாக பூதலூரில் இருந்து புறப்பட்டு சென்றது. 

Tags:    

மேலும் செய்திகள்