காவிரி விவகாரம்: முதல்-அமைச்சருடன் ஆலோசித்து முடிவு - நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

காவிரி விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

Update: 2024-07-15 05:51 GMT

சென்னை,

காவிரியில் தமிழ்நாட்டுக்கு 12 முதல் 31-ந்தேதி வரை 20 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 11 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. இதற்கு கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால், இந்த மாத இறுதி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று அறிவித்தது.

இந்த நிலையில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருப்பது குறித்து ஆலோசிப்பதற்காக பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காவிரிக்கு நீர் தரும் 4 அணைகளின் நிலவரங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.

இதையடுத்து தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. தற்போதைக்கு 11 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட முடியாது என்றும், 8 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுமென்றும் அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பேச்சக்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். வேலூரில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

காவிரி விவகாரத்தில் கர்நாடகா சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல் இருக்கிறது. அவர்கள் உரிமையை அவர்கள் கேட்கிறார்கள்; நமது உரிமையை நாம் கேட்கிறோம். காவிரி விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்துக்கட்சி கூட்டமா அல்லது கர்நாடக முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதுவதா என முதல்-அமைச்சர் முடிவெடுப்பார்.

கர்நாடகா அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருக்கிறது; ஆனாலும் தமிழகத்திற்கு திறக்கவில்லை. இதுவரை 4,047 கன அடி தண்ணீர் மட்டுமே மேட்டூர் அணைக்கு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்