போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்
சீர்காழி நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி:
சீர்காழி நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்
சீர்காழி நகர் பகுதிக்குட்பட்ட தென்பாதி, மயிலாடுதுறை சாலை, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தேர் மேலவீதி, வடக்குவீதி, பிடாரி வடக்கு வீதி, ஈசானிய தெரு, கொள்ளிடம் முக்கூட்டு, கடைவீதி,ரெயில்வே ரோடு, சிதம்பரம் சாலை, தாடாளன் கோவில், ரெயில்வே ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் எப்போதும் அதிக அளவில் வாகன போக்குவரத்து நடைபெறும்.
இந்த நிலையில் சீர்காழி நகர் பகுதிகளில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிகின்றன.
விபத்துகள்
சுற்றித்திரியும் மாடுகள் சாலைகளில் திடீரென குறுக்கே ஓடுகிறது. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் காயம் அடைகின்றனர். மேலும் சாலைகளில் செல்லும் பொதுமக்களை மாடுகள் முட்டுகின்றன. நாய்கள் வாகனங்களில் செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன. சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சீர்காழி நகர் பகுதியில் போக்குவரத்துக்க இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளை சாலைகளில் சுற்றித்திரிய விடும் அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.