நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு

நெல்லை அருகே ஓடும் காரில் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் இன்றி தப்பினர்.

Update: 2022-12-09 20:02 GMT

நெல்லை அருகே ஓடும் காரில் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் இன்றி தப்பினர்.

தொழில் அதிபர்

நெல்லை டவுன் சிவா தெருவை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் கணபதி விஜய், தொழில் அதிபர். இவர் நேற்று காலை கோவில்பட்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் சென்றார். அங்கு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நெல்லை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவருடன் நண்பர்கள் 2 பேரும் காரில் வந்தனர்.

மதுரை-நெல்லை 4 வழிச்சாலையில் இருந்து குறிச்சிகுளம் வழியாக நெல்லை நோக்கி கார் வந்து கொண்டிருந்தது.

காரில் தீப்பிடித்தது

அப்போது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து லேசான புகை வந்தது. உடனே கணபதி விஜய் காரை நிறுத்தி கீழே இறங்கி பார்த்தபோது, காரில் தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட காரில் இருந்த மற்றவர்களும் கீழே இறங்கியதால், காயம் எதுவும் இன்றி தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெல்லை மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் வெட்டும் பெருமாள், பாளையங்கோட்டை நிலைய அலுவலர் ராஜா ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும், கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.

பரபரப்பு

எலக்ட்ரிக்கல் பிரச்சினையால் காரில் தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓடும் காரில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்