வேலூரில் அதிமுக மாவட்ட செயலாளர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு: சிறையில் அடைப்பு
காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்த அ.தி.மு.க. வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்,
காட்பாடி ரெயில்வே மேம்பாலம் காட்பாடி ரெயில்வே மேம்பாலம் கடந்த மாதம் 1-ந்தேதி சீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டது. போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதைகளில் வாகனங்கள் இயக்கப்பட்டன. ஒரு மாதத்தில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்தது. அதனால் நேற்று முதல் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, மேம்பாலத்தில் நேற்று முதல் இருசக்கர வாகனங்கள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று காலை அ.தி.மு.க. வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையிலான அ.தி.மு.க.வினர் பாலத்தின் அருகே திரண்டு வந்தனர். அவர்கள் பாலத்தின் மீது ரிப்பன் கட்டினர். இதனால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பாலத்தை சீரமைக்க நாங்கள் தான் காரணம். பாலத்தில் அனைத்து வாகனங்களையும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு ரிப்பன் வெட்டி பாலத்தை திறந்து வைத்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த தி.மு.க. பகுதி செயலாளர் வன்னியராஜா தலைமையில் மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா மற்றும் தி.மு.க.வினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அப்புவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த காட்பாடி போலீசார் இருதரப்பையும் சமாதானப்படுத்தினர். பின்னர் அவர்கள் அ.தி.மு.க., வினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தாராபடவேடு கிராம நிர்வாக அலுவலர் பவித்ரா காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் செங்குட்டையில் உள்ள அப்புவின் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தகவல் அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் அப்பு வீட்டின் முன்பு குவிந்தனர். அவரை காட்பாடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவரிடமும் மற்ற நிர்வாகிகளிடமும் விசாரணை நடந்தது. அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு, காட்பாடி பகுதி செயலாளர் ஜனார்த்தனன் ஆகியோரை பிணையில் வெளிவர முடியாத வகையில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் காட்பாடி போலீஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்தநிலையில் அ.தி.மு.க. வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "வேலூர் மாவட்டம், காட்பாடியில் பழுதடைந்த ரயில்வே மேம்பாலத்தை சீரமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர், இச்சிரமங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் நூதன முறையில் போராட்டம் நடத்திய, வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் அப்பு அவர்கள் மீது, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ள இந்த விடியா திமுக அரசின் அடக்குமுறை நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று அதில் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.