வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற வழக்கு; 3 பேருக்கு ஆயுள் தண்டனை
வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி
நெல்லை கோர்ட்டில் கடந்த 26.7.2004 அன்று நடந்த ஒரு வழக்கு விசாரணையில் புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட சிலர், ஆஜரானார்கள். பின்னர் அவர்கள், கோர்ட்டில் இருந்து காரில் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
நெல்லை- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் அரசு சட்டக்கல்லூரி அருகில் சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த மர்மநபர்கள் திடீரென்று காரின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி, காரில் இருந்தவர்களை கொல்ல முயன்றனர். இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
15 பேர் கைது
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக நெல்லை ராமையன்பட்டியை சேர்ந்த துரைபாண்டி மகன் சிவா என்ற சிவலிங்கம் (வயது 46), மூன்றடைப்பு பானான்குளத்தை சேர்ந்த தங்கவேல் (53), ராமையன்பட்டியை சேர்ந்த பரமசிவன் மகன் லட்சுமணன் (41), முத்துபாண்டி, செண்பகம், சக்தி என்ற சக்திவேல், சுரேஷ், கண்ணன், செல்வகிருஷ்ணன், மணிகண்டன், முத்து என்ற கராத்தே முத்து, சங்கர், திரவியம், சூரப்பன், மதன் ஆகிய 15 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நடைபெற்ற காலத்தில் சங்கர், மதன், திரவியம் ஆகிய 3 பேர் இறந்தனர். எனவே மற்ற 12 பேர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்றது.
ஆயுள் தண்டனை
வழக்கை விசாரித்த நீதிபதி பத்மநாபன் குற்றம் சாட்டப்பட்ட சிவா என்ற சிவலிங்கம், தங்கவேல், லட்சுமணன் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். மேலும் அவர்கள் 3 பேருக்கும் தலா ரூ.4 ஆயிரத்து 500 அபராதம் விதித்தார்.
மற்ற 9 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கந்தசாமி ஆஜரானார்.