பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த ரெயில்வே ஊழியர் மீது வழக்கு
பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த ரெயில்வே ஊழியர் மீது வழக்கு;
குளச்சல்:
குளச்சல் அருகே வர்த்தான்விளையை சேர்ந்தவர் ஜான் சுந்தர் சிங் என்ற கென்னடி ( வயது 55), ெரயில்வே ஊழியர். கடந்த அக்டோபர் மாதம் இங்கு ஆலய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் கென்னடி மனைவி ஜெனிட்டா செயலாளர் பதவிக்கு போட்டியிட்டார். அப்போது கென்னடி, ஜெனிட்டாவுக்கு ஆதரவாக செயல்படும்படி ஒரு பெண்ணிடம் கூறினார். அதை அவர் ஏற்க மறுத்ததால் அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி அந்த பெண் வீட்டு முன் நிற்கும்போது அங்கு வந்த கென்னடி, அவரை தகாத வார்த்தையால் பேசி மிரட்டல் விடுத்ததுடன் பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்தினாராம். இதுபற்றி அந்த பெண் இரணியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை பரிசீலித்த கோர்ட்டு கென்னடி மீது வழக்குப்பதிவு செய்ய குளச்சல் போலீசாருக்கு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து கென்னடி மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட பல பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.