மின்வாரிய ஊழியர் மீது வழக்கு
போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த மின்வாரிய ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்பம் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜ். இவர், தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள மின்வாரிய மத்திய பண்டக சாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். அவர் பணிக்கு சேரும் போது சமர்ப்பித்த பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் போலியானது என்று புகார் கூறப்பட்டது. அரசு தேர்வுகள் இயக்க இணை இயக்குனரும் இந்த மதிப்பெண் சான்றிதழ் போலியானது என்று மின்வாரியத்துக்கு அறிக்கை அளித்தார். அதன்பேரில் கடந்த ஜூலை மாதம் பாண்டியராஜ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் போலியான மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து பணியில் சேர்ந்து மோசடி செய்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில், மின்வாரிய மத்திய பண்டகசாலையின் பண்டக அலுவலர் ஜெயராம் புகார் கொடுத்தார். அதன்பேரில் பாண்டியராஜ் மீது நேற்று முன்தினம் இரவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.