மறியலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு

மறியலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;

Update:2023-09-04 00:57 IST

லால்குடி:

லால்குடி தாலுகாவில் உள்ள 105 கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.243 கோடியில் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற அன்பில் கொள்ளிடம் ஆற்றில் ராட்சத ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்பகுதியில் அன்பில், ஜங்கமாபுரம், மங்கம்மாள்புரம், அறியூர், செங்கரையூர் மற்றும் பல கிராம மக்கள் ஏற்கனவே அன்பில் கொள்ளிடத்தில் அளவுக்கு மீறி மணல் அள்ளியதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. எனவே கூட்டுக்குடிநீர் திட்டத்தை கைவிடுமாறு பலமுறை ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆனால் கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி தொடங்கியதால் நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் கல்வீச்சில் அரசு பஸ் கண்ணாடி உடைந்ததால் போலீசார் லேசான தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர். பெண்கள் உள்பட 65 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அரசு பஸ் கண்ணாடியை உடைத்ததாகவும், போலீஸ் மீது தள்ளுமுள்ளு நடத்தியதாகவும் உள்பட 5 பிரிவுகளில் அன்பில் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன், அறியூர் கமலக்கண்ணன்(வயது 43), அன்பில் ஜங்கம்மாபுரம் சுப்பிரமணி(54), கீழன்பில் ரவிக்குமார்(53), ரமேஷ்(47), கோட்டைமேடு அறிவழகன்(63), மங்கம்மாள்புரம் ரமேஷ்(51), ஜங்கம்மாபுரம் சபரீசன்(36), கீழன்பில் சரவணன்(39), அன்பில் ஜங்கம்மாபுரம் பொன்னப்பன்(55) ஆகிய 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்