தர்மபுரி அருகே உள்ள பள்ளகொல்லை மலையடிவாரத்தில் லாரியில் மணல் கடத்துவதாக தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அரசின் அனுமதியை பெறாமல் லாரியில் நொரம்பு மண் ஏற்றுவது தெரியவந்தது. போலீசாரை பார்த்ததும் லாரியில் இருந்தவர்கள் ஓடி விட்டனர். இதையடுத்து லாரி மற்றும் மண் அள்ளிய எந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் செட்டிகரை பகுதியைச் சேர்ந்த காளியப்பன் (வயது 47) என்பவருக்கு சொந்தமான லாரி என தெரியவந்தது. இதில் தொடர்புடைய டிரைவர்கள் மாதப்பன் (41), சின்னசாமி (49) ஆகிய 3 பேர் மீது தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.