சரக்கு ஆட்டோ டிரைவர் சாவு

விபத்து தொடர்பாக நடைபெற்ற தகராறில் சரக்கு ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டார். இதில் அவர் இறந்துபோனார்.

Update: 2022-09-21 18:45 GMT

கோவை, 

விபத்து தொடர்பாக நடைபெற்ற தகராறில் சரக்கு ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டார். இதில் அவர் இறந்துபோனார்.

விபத்து தகராறு

கோவை பீளமேடு அருகே உள்ள எஸ்.டி.வி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 73). இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு சுப்பிரமணியம் எஸ்.டி.வி நகர் வழியாக தனது சரக்கு ஆட்டோவை ஓட்டி சென்றார். அப்போது எதிரே சென்ற கிருஷ்ணகுமார் என்பவரது காரில் எதிர்பாராதவிதமாக சரக்கு ஆட்டோ மோதியதாக தெரிகிறது. இதில் காரின் இண்டிகேட்டர் உடைந்தது.அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது இதனையடுத்து சுப்பிரமணியம் கிருஷ்ணகுமாரிடம் பணம் கொடுப்பதாக கூறினார். ஆனால் கூறியபடி அவர் பணத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது

தாக்குதலில் சாவு

இந்த நிலையில் சுப்பிரமணியம் எஸ்.டி.வி.நகர் 3- வீதியில் நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு கிருஷ்ணகுமார் வந்தார்.அவர் சுப்பிரமணியத்திடம் காரின் இண்டிகேட்டருக்கான பணத்தை கொடுக்கும்படி கேட்டார்.அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணகுமார் சரக்கு ஆட்டோ டிரைவரை கைகளால் தாக்கி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.

இதில் அவருக்கு உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் காயத்துடன் வீட்டிற்கு சென்றார். வீட்டில் இருந்த சுப்பிரமணியம் திடீரென்று மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.சுப்பிரமணியத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பீளமேடு போலீசார் 304 (2) (கொலையாகும் என்று தெரியாமலே தாக்கி மரணத்தை ஏற்படுத்துதல்) என்ற சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள கிருஷ்ணகுமாரை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்