தென்காசி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசிங். இவர் அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகள் நெல்லையில் இருப்பதால் ஜெயசிங் தனது வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் முன்பு 2019-ம் ஆண்டு வாங்கிய ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரை வீட்டு வாசலில் நிறுத்தி சென்றுள்ளார். இவரது வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருட்களை திருட முயற்சி செய்துள்ளனர். அங்கு பொருட்கள் எதுவும் இல்லாததால் வாசலில் நிறுத்தி இருந்த காரை திருடிச் சென்றுள்ளனர். மறுநாள் காலையில் இதுகுறித்து அக்கம்பக்கத்தவர்கள் ஜெயசிங்கிற்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அவர் தென்காசி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு நாகசங்கர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். விரல் ரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விசாரணை நடத்தி வருகிறார்.