பள்ளத்தில் கார் உருண்டு விபத்து; பிறந்தநாளன்று வாலிபர் பலி
பள்ளத்தில் கார் உருண்ட விபத்தில் பிறந்தநாளன்று வாலிபர் பலியானார்.;
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள சாட்சியாபுரம் ஆசாரிகாலனியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் ஹரிசங்கர் (வயது 19). இவர் தன்னுடைய நண்பர்கள் பிரபாகரன் (21), கார்த்திகேயன் என்கிற கார்த்தீஸ்வரன் (20), ராஜாமுகமது (19), சுந்தரமூர்த்தி (20), மாரீஸ்வரன் (20) முனீஸ்வரன் (29) மற்றும் சிலருடன் சாத்தூர் அருகே உள்ள உப்பத்தூருக்கு சென்று அங்கு வைத்து கார்த்தீஸ்வரனுக்கு பிறந்தநாள் கொண்டாட முடிவு செய்தனர். இதையடுத்து ஹரிசங்கர், கார்த்தீஸ்வரன் உள்பட 9 பேர் சிவகாசியில் இருந்து சாத்தூருக்கு காரில் சென்றனர். காரை முனீஸ்வரன் ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. அதிகாலையில் கோணம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி கார் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் உருண்டது. இதில் காரில் பயணம் செய்த அனைவரும் படுகாயம் அடைந்தனர். உடனே அந்த வழியாக சென்றவர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக முனீஸ்வரன், சுந்தரமூர்த்தி ஆகியோர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
பலத்த காயம் அடைந்த கார்த்தீஸ்வரன், பிரபாகரன் ஆகியோரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள், கார்த்தீஸ்வரனை பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து சாத்தூர் டவுன் போலீசார் சாட்சியாபுரம் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த அய்யப்பன் மகன் முனீஸ்வரன் (29) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிறந்தநாள் கொண்டாட நண்பர்களுடன் சென்ற வாலிபர், விபத்தில் பலியான சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.