கார் கவிழ்ந்து ஜி.எஸ்.டி. அலுவலர் பலி

நெல்லையில் கார் கவிழ்ந்து ஜி.எஸ்.டி அலுவலர் பலியானார். மற்றொரு விபத்தில் வாலிபர் இறந்தார்.

Update: 2023-10-03 21:27 GMT

ஜி.எஸ்.டி. அலுவலர்

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழ் அழகன் (வயது 58). இவர் ஜி.எஸ்.டி. அலுவலராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் காரில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்திருந்தார். நேற்று மாலை நெல்லை வழியாக சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

நெல்லையை கடந்து தாழையூத்து பகுதியில் சென்ற போது காரின் குறுக்கே மாடு பாய்ந்து ஓடியது. மாடு மீது மோதாமல் இருக்க தமிழ் அழகன் திடீரென பிரேக் பிடித்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த தமிழ் அழகன் பலத்த காயம் அடைந்தார்.

தகவல் அறிந்த தாழையூத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தமிழ் அழகனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து

இதேபோல் கன்னியாகுமரி -நெல்லை 4 வழிச்சாலையில் பொன்னாக்குடி அருகே பேரின்பபுரம் பகுதியில் நேற்று மாலை காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த செண்பகராமன்புதூரை சேர்ந்த வசந்தபாலன் (18), டேனியல் ராஜ் (17) ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் 2 பேரும் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே வசந்த பாலன் உயிரிழந்தார். டேனியல்ராஜ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்