கார் மரத்தில் மோதி வியாபாரி பலி
ஊட்டிக்கு சுற்றுலா சென்ற போது கார் மரத்தில் மோதி வியாபாரி பலியானார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேட்டுப்பாளையம்
ஊட்டிக்கு சுற்றுலா சென்ற போது கார் மரத்தில் மோதி வியாபாரி பலியானார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஊட்டிக்கு சுற்றுலா
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மலக்குள்ளி அருகே பாலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). வியாபாரி. இவருடைய மனைவி ரஞ்சினி (30). இவர்களுக்கு ஜோசப் ஆபிரகாம் (8), கேசர் (6) என 2 மகன்கள் உள்ளனர். ராஜேஷின் தங்கை சித்ரா (27). கோடை விடுமுறையையொட்டி ராஜேஷ் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் அவர் தனது குடும்பத்தினர் மற்றும் சித்ராவை அழைத்துக்கொண்டு காரில் புறப்பட்டார். காரை டிரைவர் பூவேந்திரன் (25) என்பவர் ஓட்டினார். நேற்று அதிகாலை மேட்டுப்பாளையம்-அன்னூர் மெயின் ரோட்டில் மேட்டுப்பாளையம் நோக்கி கார் வந்து கொண்டிருந்தது. காரில் இருந்த அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
கார் மரத்தில் மோதியது
அதிகாலை 4.30 மணிக்கு குமரன் குன்று அருகே வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக அங்குமிங்கும் ஓடியது. பின்னர் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. முன் இருக்கையில் அமர்ந்திருந்த ராஜேஷ் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ரஞ்சினி, சித்ரா, ஜோசப் ஆபிரகாம், கேசர், பூவேந்திரன் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமுகை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருந்த 5 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த ராஜேஷின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.