டயர் வெடித்து தடுப்புக்கம்பியில் கார் மோதல்; 10 பேர் காயம்
செங்கோட்டை அருகே டயர் வெடித்து தடுப்புக்கம்பியில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயம் அடைந்தனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே டயர் வெடித்து தடுப்புக்கம்பியில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயம் அடைந்தனர்.
குற்றாலத்துக்கு வந்தனர்
ராமநாதபுரம் அழகன்குளம் வடக்குத்தெரு பகுதியில் இருந்து 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் சுற்றுலா செல்வதற்காக ஒரு காரில் குற்றாலம் வந்தனர். நேற்று காலையில் அனைவரும் குற்றாலம் அருவியில் குளித்து விட்டு கேரள மாநிலம் ஆரியங்காவில் அமைந்துள்ள பாலருவியில் குளிப்பதற்காக காரில் புறப்பட்டனர். முகைதீன் ஆசீர் (41) என்பவர் கார் ஓட்டினார்.
செங்கோட்டை கட்டளைகுடியிப்பு அருகே கொல்லம் மெயின் ரோட்டில் சென்றபோது காரின் டயர் திடீரென டமார் என்ற சத்தத்துடன் வெடித்தது. இதனால் கார் நிலைதடுமாறி ரோட்டின் வலதுபுறம் உள்ள தடுப்பு கம்பியில் பயங்கரமாக மோதி திரும்பி நின்றது.
10 பேர் காயம்
இந்த விபத்தில் முகைதீன் ஆசீர், அவருடைய மனைவி பர்வீன் பாதித்திமா (35), மகள்கள் அப்ரா (13), அஸ்ரா (9), மகன் முகம்மது ஆசீம் (7) மற்றும் உறவினர்கள் மரியம் சித்திக்கா (45), முகம்மது ரிஸ்வான் (42), ரஷிதா (42), சித்திக் ரோக்கையா (11), நோகுஷிதான் (8) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் புளியரை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு வேறு ஒரு கார் மூலம் செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல்உதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீ்சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.