செங்கல்பட்டு அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதல்; ஒருவர் பலி
செங்கல்பட்டு அருகே மெத்தனத்தில் சாலையை கடக்க முயன்ற போது ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.
மெத்தனத்தில் விபத்து
செங்கல்பட்டு அடுத்த பச்சையம்மன் கோவில் பகுதி தட்டான்மலை தெருவை சேர்ந்தவர் மரியதாஸ் (வயது 50). இவர் நேற்று காலை தனது நண்பர் விமலுடன் ஸ்கூட்டரில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை மெத்தனமாக கடக்க முயன்றார். அப்போது திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கண் இமைக்கும் நேரத்தில் மரியதாஸ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் மரியதாஸ் தூக்கிவிசப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே துடி,துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மரியதாஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
போலீசார் விசாரணை
மேலும் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த விமலை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த மதுரையை சேர்ந்த பிரதீப்குமார்(34) என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த பதைபதைக்கும் விபத்து சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில், வலைத்தளங்களில் வைரலாக பரவி காண்பவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.