தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே ராகு காலத்தில் பூஜை செய்து, வீரபத்திர சாமி கோவில் தேரோட்டம் நடந்தது.
தேர்த்திருவிழா
தேன்கனிக்கோட்டை அருகே பளேரப்பள்ளி கிராமத்தில் பழமை வாய்ந்த வீரபத்திர சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் தேர்த்திருவிழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. வேறு எங்கும் இல்லாத வகையில் இங்கு, ராகு காலத்தில் சாமிக்கு பூஜைகள் செய்யப்பட்டு, தேரோட்டம் நடைபெறும்.
அதன்படி நேற்று வீரபத்திர சாமி தேர்த்திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக ராகு காலத்தில் வீரபத்திர சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் சாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தோளில் சுமந்து...
தேரை பக்தர்கள் தங்களது தோள்களில் சுமந்து சென்றனர். பளேரப்பள்ளி, நாகொண்டபாளையம், மராட்டிபாளையம், குருபரப்பள்ளி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்கள் வழியாக, மேளதாளங்கள் முழங்க தேரோட்டம் நடந்தது. மேலும் ஒவ்வொரு கிராமங்களிலும் விளை நிலங்கள் வழியாகவும் தேர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.