எழுமாத்தூரில் சாலையில் தோண்டப்பட்ட குழியில் கார் சிக்கியது

எழுமாத்தூரில் சாலையில் தோண்டப்பட்ட குழியில் கார் சிக்கியது

Update: 2022-12-20 22:23 GMT

மொடக்குறிச்சி

மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூரில் ஈரோடு- முத்தூர் முக்கிய சாலையாக உள்ளது. எழுமாத்தூரில் அரசு கலைக்கல்லூரி, ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், அரசு மருத்துவமனை, திருமண மண்டபங்கள், வங்கிகள் போன்றவைகள் உள்ளன. எனவே இங்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் எழுமாத்தூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி தாங்கள் செல்லும் இடத்துக்கு செல்கிறார்கள்.

கடந்த 6 மாதங்களாக எழுமாத்தூரில் காவிரி கூட்டுக் குடிநீர்த்திட்ட பணிகள், சாலை விரிவாக்கம் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்காரணமாக சாலையை தோண்டுவதும், மூடுவதுமாக பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அதிலும் சில இடங்களில் குழிகள் சரிவர மூடப்படுவதில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் குழிக்குள் சிக்கி கொள்வதும், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.

இந்த நிலையில் எழுமாத்தூர் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று முன்தினம் வந்த கார் ஒன்று அங்கு தோண்டப்பட்ட குழிக்குள் இறங்கியது. டிரைவர் மேற்கொண்டு இயக்கியும் காரை அங்கிருந்து நகர்த்த முடியவில்லை. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு சென்று காரை அங்கிருந்து மீட்டனர். இதைத்தொடர்ந்து கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. அதன்பின்னர் போக்குவரத்து சீரானது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'சாலை மற்றும் குடிநீர் பணிக்காக தோண்டப்படும் குழிகளை உடனுக்குடன் முறையாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்