தொடக்க கல்வி பட்டய தேர்வு எழுத தனித்தேர்வர்கள் நாளை மறுநாள் முதல் விண்ணப்பிக்கலாம்
தொடக்க கல்வி பட்டய தேர்வு எழுத தனித்தேர்வர்கள் நாளை மறுநாள் முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் அடுத்த மாதம் (ஜூன்) நடைபெறவுள்ள தொடக்க கல்வி பட்டய தேர்விற்கு தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற அனைத்து மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களுடன் பாடாலூரில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மதியம் முதல் வருகிற 13-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள வெப் கேமரா வழியாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால், அந்நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து உரிய தேர்வு கட்டணத்தினை செலுத்த வேண்டும். தேர்வு கட்டண விவரம் வருமாறு:- ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50, மதிப்பெண் சான்றிதழ் (முதலாமாண்டு) ரூ.100, மதிப்பெண் சான்றிதழ் (இரண்டாமாண்டு) ரூ.100, பதிவு மற்றும் சேவை கட்டணம் ரூ.15, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.70. 13-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தில் (தட்கல்) வருகிற 15, 16-ந்தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு அனுமதி கட்டணமாக கூடுதலாக ரூ.1,000 செலுத்த வேண்டும். தபால் வழி பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தேர்வர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு வரும் போது கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும். போதிய சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றி தேர்வர்கள் விண்ணப்பித்து தேர்வு எழுதலாம், என்று மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.