பாம்பன் ரெயில் பாலத்தில் மறு அறிவிப்பு வரும் வரை பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து
பாம்பன் ரெயில் பாலத்தில் மறு அறிவிப்பு வரும் வரை பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது எனவும், பல ரெயில்கள் மண்டபத்தில் இருந்த புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்,
பாம்பன் ரெயில் பாலத்தில் மறு அறிவிப்பு வரும் வரை பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது எனவும், பல ரெயில்கள் மண்டபத்தில் இருந்த புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலத்தில் அதிர்வுகள்
ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. அதுபோல் கடந்த டிசம்பர் மாதம் 24-ந் தேதி அன்று இரவு ராமேசுவரத்திற்கு பயணிகளுடன் ரெயில் ஒன்று வரும்போது தூக்குப்பாலத்தில் லேசான அதிர்வுகள் ஏற்பட்டது. இது பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் மூலம் தெரியவந்தது. அதை தொடர்ந்து கடந்த 17 நாட்களாகவே பாம்பன் ரெயில் பாலத்தில் பயணிகள் ரெயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை மற்றும் திருச்சியில் இருந்து ராமேசுவரம் வர வேண்டிய பயணிகள் ரெயிலும் கடந்த 17 நாட்களாகவே ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்பட்டு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு செல்கின்றன. சென்னையில் இருந்து வரும் இரண்டு ரெயில்கள் மட்டுமே மண்டபம் வரை இயக்கப்பட்டு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு செல்கின்றன.
இந்த நிலையில் பாம்பன் ரெயில் பாலத்தில் மறு அறிவிப்பு வரும் வரை பயணிகள் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக தெற்கு ெரயில்வேயால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ெரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மறுஅறிவிப்பு வரும் வரை
பாம்பன் ரெயில் பாலத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. இதன் காரணமாக சென்னை எழும்பூர் - ராமேசுவரம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில்கள் [மெயின் லைன் (16751/16752), கார்ட் லைன் (22661/22662) வழி ரயில்கள்], திருப்பதி ராமேசுவரம் திருப்பதி வாரம் மும்முறை சேவை ரயில்கள் (16779/16780), கன்னியாகுமரி - ராமேசுவரம் - கன்னியாகுமரி வாரம் மும்முறை சேவை ெரயில்கள் (22622/22621), அஜ்மீர் - ராமேசுவரம் - அஜ்மீர் (20973/20974), பனாரஸ் - ராமேசுவரம் - பனாரஸ் (22536/22535), ஓஹா - ராமேசுவரம் - ஓஹா (16734/16733) வாராந்திர விரைவு ெரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை ராமேசுவரம் - மண்டபம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
திருச்சி - ராமேசுவரம் - திருச்சி, மற்றும் அனைத்து மதுரை - ராமேசுவரம் - மதுரை விரைவு ெரயில்கள், அயோத்தியா கண்டோண்மென்ட் - ராமேசுவரம் - அயோத்தியா கண்டோண்மென்ட் (22614/22613), புவனேஸ்வர் - ராமேசுவரம் - புவனேஸ்வர் (20896/20895), ஹூப்ளி - ராமேசுவரம் - ஹூப்ளி (07355/07356), கோயம்புத்தூர் - ராமேசுவரம் - கோயம்புத்தூர் (16618/16617), செகந்திராபாத் - ராமேசுவரம் - செகந்திராபாத் (07695/07696) வாராந்திர விரைவு ெரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை ராமநாதபுரம் - ராமேசுவரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருப்பதி ராமேசுவரம் விரைவு ெரயிலின் இணை ெரயிலான ராமேசுவரம் - மதுரை சிறப்பு ெரயில் (06780) மறு அறிவிப்பு வரும் வரை மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.