அண்ணன் மகனுக்கு முதியவர் எழுதி கொடுத்த சொத்து ஆவணம் ரத்து

வயதான தம்பதியை பராமரிக்க தவறியதால் அண்ணன் மகனுக்கு முதியவர் எழுதி கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்து சப்-கலெக்டர் கவுசிக் உத்தரவிட்டார்.

Update: 2023-07-19 21:17 GMT

தக்கலை:

வயதான தம்பதியை பராமரிக்க தவறியதால் அண்ணன் மகனுக்கு முதியவர் எழுதி கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்து சப்-கலெக்டர் கவுசிக் உத்தரவிட்டார்.

அண்ணன் மகனுக்கு சொத்து

திங்கள்சந்தை அருகே உள்ள முரசங்கோடு பகுதியில் வசித்து வருபவர் மரியலூயிஸ் (வயது 74). கூலி தொழிலாளியான இவருடைய மனைவி அசுந்தா மேரி (70). இவர்களுக்கு குழந்தை இல்லை.

இதனால் தனக்கு சொந்தமான லெட்சுமிபுரத்தில் உள்ள 5 சென்ட் நிலத்தை அண்ணனின் மூத்த மகனுக்கு நிபந்தனையுடன் எழுதி கொடுத்தார். வயது மூப்பின் காரணமாக தற்போது மரிய லூயிஸால் வேலைக்கு செல்ல முடியவில்லை. மனைவி அசுந்தமேரியின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார்.

இதற்கிடையே பராமரிக்க வேண்டிய அவரது அண்ணன் மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அதே சமயத்தில் இங்கு வசித்த அண்ணன் மகனின் மனைவி இவர்களை கவனிப்பதை தவிர்த்தார். மேலும் எந்தவொரு உதவியும் செய்யவில்லை.

பராமரிக்க தவறியால் ரத்து

இதனால் வேதனை அடைந்த மரியலூயிஸ் தக்கலையில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு தீர்ப்பாயத்தில் மனு அளித்தார்.

இந்த மனுவை பரிசீலனை செய்த தீர்ப்பாயத்தின் நடுவரான சப்- கலெக்டர் கவுசிக் விசாரணை நடத்தினார்.

விசாரணை முடிவில் மரியலூயிஸ் எழுதிக் கொடுத்த 5 சென்ட் நிலத்திற்கான சொத்து ஆவணத்தை ரத்து செய்வதாக சப்-கலெக்டர் கவுசிக் உத்தரவிட்டார். மேலும் எதிர் தரப்பினர் இந்த தீர்ப்பாணையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விரும்பினால் ஆணை பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து 60 நாட்களுக்குள் மாவட்ட கலெக்டரிடம் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையிட வழிவகை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்